x

மே 26 : தவமா? தற்சோதனையா? எது எதற்கு உதவுகிறது ?

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


தவமா? தற்சோதனையா? எது எதற்கு உதவுகிறது ?.

வினா:

“தவம் தற்சோதனைக்கு உதவுகிறதா? தற்சோதனை தவத்திற்கு உதவுகிறதா?”

விடை :

இரண்டுமே ஒன்றுக்கொன்று உதவக் கூடியவை தான். ஒருவன் தன்னிடமுள்ள உணர்ச்சிவயத்தைக் கண்டறிந்து, அது காரணமாக அவன் செய்து வந்த தவறுகளை உணர்ந்து, அவற்றை இனியேனும் செய்யக் கூடாது என முடிவெடுத்துக் கொள்வதும், அம்முடிவைச் செயல்படுத்துவதும் தான் தற்சோதனை. இத்தற்சோதனை தான் இப்போது ஆன்மீகத்தில் புதிதாக என்னால் சேர்க்கப் பட்டிருக்கிறது. இவ் உளப் பயிற்சி முறை தான் மனிதனை மிருகக் குணத்திலிருந்து உண்மையில், காரியாம்சத்தில் மீட்கக் கூடியது.

இந்தத் தற்சோதனையை வெற்றியுடன் செய்து முடிப்பதற்கு தான் தவம் உதவுகிறது. வெளிச்சத்தில் ஒரு பொருளை தேடி எடுப்பது போல், தவம் தரும் மன அமைதி நிலையில் தனது குறைகள் தெரியவரும். பிறகு அதே தவம் தந்த மன உறுதியை கொண்டு, அவற்றை நீக்கவும் முடியும். அதே போல், தற்சோதனையால் தூய்மையடைந்து விட்டால் தவம் எளிதாகவும், சிறப்பாகவும் அமைகிறது. இந்த இரண்டையும் கொண்டு மனித குல வாழ்க்கையைத் தெய்வீக வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளலாம். வேறு வழி இல்லை.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

 

“மாசற்ற ஒளி ஊடே மறைந்திருக்கும் இருள் போல

ஈசன் அறிவில் இருக்கும் நிலை”.

“வேண்டியதற்கு படிகட்டி வேண்டாததை வடிகட்டும்

எண்ணமே உள்மன அமைதிக்கு உரம்”.

“மனம் தன்னை தூய்மை செய்து கொள்ள

எடுக்கும் முயற்சியே தற்சோதனை”.

அகத்தவத்தின் பெருமை:

அகத் தவத்தின் பொருள் கண்டு

அதன் பெருமை உணர்ந்திடுவீர் !

அகத் தவமோ உயிரினிலே

அறிவை ஒடுக்கும் பயிற்சி !

அகத் தவத்தால் மேலும் உயிர்

அம்மாகி மெய்ப்பொருளாம் !

அகத் தவத்தால் வீடுணர்ந்து

அமைதி பெற்று இன்புறலாம் !

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : மே 27 : கடவுள் வணக்கம்

PREV      : மே 25 : நிறைவான வாழ்வு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!