x

நவம்பர் 05 : இறைநிலையுணர்ந்த அறிவு

வாழ்க வையகம் வாழ்கவளமுடன்!!


இறைநிலையுணர்ந்த அறிவு :

“பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் சிறந்ததோர் தெய்வீகக் கருவூலம் மனிதப் பிறப்பு. பிரம்மம் என்பதே தெய்வம் எனப் போற்றப்படுகிறது. அதுவேதான் இறைவெளியாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சுத்தவெளியாகும். இதுவே எல்லாம் வல்ல பேராற்றலாகும். இது எல்லையற்ற விரிவு நிலையுடையதாக இருப்பதால் புலன்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது. இது விரைவு, பருமன், காலம், தூரம் எனும் நான்கு கணக்குகளுக்கு உட்படாதது. இம் மாபெரும் ஆற்றலிலிருந்து தான் பரமாணுவெனும் நுண்ணியக்கத் துகள் தோன்றியது. பரமாணுக்கள் பல இணைந்து அணுவாகவும், அணுக்கள் பல இணைந்து பேரணு, செல்கள், பல உருவத் தோற்றங்கள், வானுலவும் கோள்கள், உலகம் மீது வாழும் ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையில் தொடரியக்கமான பரிணாமம் தான் பிரம்மம் எனும் தெய்வீகப் பேராற்றலின் சரித்திரம்.

மனிதன் என்ற தோற்றமே, பிரம்மத்தின் ஆதி நிலையாகவுள்ள இறைவெளி முதற் பொருளாகவும், ஆறறிவு கொண்ட மனித மனமே இறுதியாகவும் உள்ளது. ஆதி முதல் அந்தம் வரையில் அனைத்தையும் இணைத்து ஒரே அகக்காட்சியாகக் காணக் கூடிய பேரறிவுதான் பிரம்ம ஞானம் ஆகும். இத்தகைய அறிவு தான் இறை நிலையுணர்ந்த அறிவு. அதுவே தன் முடிவு நிலையான மனதின் ஊடுள்ள உட்பொருளான அறிவாகவும், அவ்வறிவுதான் தானாகவும் இருக்கும் முழுமை நிலையுணர்ந்த தெளிவே பிரம்ம ஞானம் ஆகும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

 

பிரம்ம வித்தை:

“வித்தை என்றால் பிரம்ம வித்தை உயர்வதாகும்

வேதாந்தம் பேசுவதால் கிட்டிடாது

அத்து விதமாகி அவன் எங்கு மாகி

அணு முதலாய் அண்டங்களாகித் தாங்கும்

சுத்த வெளி சூனியமாய், நிறைந்த தன்மை

சூட்சுமமாய் அனுபவமாய், அறிந்து நிற்கும்

தத்துவத்தின் முடிவான தானேயான

தனை யறிந்த வித்தை அது தர்க்கம் வேண்டாம்”.

அறிவின் நான்கு நிலைகள் :-

“அறிவறிய வேண்டு மெனில் புலன் கடந்து

அறிந்துள்ள அத்தனையும் கடந்து நின்று

அறிவிற்கு இயக்ககளப் பொருள் பரம

அணுவான உயிர்நிலையை உணர வேண்டும்;

அறிவங்கே உயிராகும் துரியமாகும்.

அந்நிலையும் கடந்துவிடத் துரியாதீதம்,


அறிவிந்த நான்கு நிலைகளில் அவ்வப்போ

அனுபவமாய் நின்று நின்று பழக வெற்றி”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :   நவம்பர் 06 : கூர்மையும், நேர்மையும்

PREV      :    நவம்பர் 04 : ஐந்திணைப்புப் பண்பாடு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!