x

ஜூலை 17 : ஓங்காரம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


ஓங்காரம் :

“சப்தத்தின் மூலநிலையை ‘ஓம்’ என்ற சொல்லால் உணர்த்துகிறார்கள் ‘ ம் ‘ என்னும் எழுத்தின் மூலம் தான் ஓங்காரத்தின் ஓர் இயல்பை பிறருக்கு உணர்த்த முடியும் என்று நினைத்தவர்கள் ‘ ம் ‘ என்ற சப்தம் எழாமல் இருக்க அதை ஞாபக அளவில் உணர்ந்து கொள்ளும்படி விளக்கம் செய்தார்கள்.

ஓசையின் விரிந்துயர்ந்த உச்ச நிலையை உணர்த்த உயிரெழுத்தாகிய ‘ ஓ ‘ வின் மூலம் சப்தத்தை எழுப்பி உயர்த்திக் காண்பித்தார்கள். ஓசையின் ஒடுக்க நிலையை ‘ ம் ‘ என்ற ஒளியை அளவில் படிப்படியாகக் குறைத்துக் குறைத்து இசைத்துப் பின் மௌன நிலையில் நினைப்பாகக் காட்டினார்கள். இவ்வாறு சப்தத்தின் விரிவு நிலை ஒடுக்க நிலை இரண்டையும் மூற் காலத்தவர்கள் விளக்கி வைத்தார்கள்.

புலனுணர்ச்சிகளிலே அறிவைச் செலுத்தி, நாத தத்துவத்தை அறிவிலே விரிவும், தெளிவும் பெறாத பக்தனுக்கு ஒருவாறு விளக்க அறிஞர்கள் முயற்சித்தார்கள். ஓசையின் உச்ச நிலையை உணர்த்தும் ‘ ஓ ‘ என்ற ஒலியையும் எழுத்தையும் ஓசையின் ஒடுக்க நிலையை உணர்த்தும் ‘ ம் ‘ என்ற ஒலியையும் எழுத்தையும் ஓ-ம் [ஓ ஓ ஓ ஓ ம்] என்று ஒலித்துக் காட்டினார்கள். அவைகளை ஏடுகளில் ‘ ஓம் ‘ என்ற எழுத்துக்களாக எழுதிக் காண்பித்தனர். அந்த இரண்டு ஓசையும் சேர்ந்து ‘ஓம்’ என்ற தனி ஓசையாயிற்று. அந்த இரண்டு எழுத்தும் சேர்ந்து ஒரு புதிய ‘ ஓம் ‘ என்ற ஒரு கூட்டு எழுத்தாயிற்று. ஆகையால் ‘ ஓம் ‘ என்பது ஒரு சங்கேதம் – குறிப்பு (Symbol) ஆகும். ஆகவே ‘ ஓம் ‘ என்ற ஓசைக்கோ, சொல்லிற்கோ எந்தத் தனிச் சிறப்போ மதிப்போ கிடையாது. புத்தகத்திலுள்ள கருத்தை அறிந்த பின், புத்தகம் மற்றவர்களுக்குத் தேவையாகும் என்று அதைப் பத்திரப்படுத்தி வருகிறோம். அதுபோல் தான் ‘ஓம்’ என்ற சொல்லும் நிலைத்து வருகிறது; தொடர்ந்து வருகிறது.

அந்த ஓங்கார நிலையை உணர்த்துவதற்கும் ‘ ம் ‘ கூட தேவையில்லை. இது போன்ற [ . ] புள்ளியே போதுமானது. தனிப் புள்ளியில் உச்சரிப்பு ஓசையானது எப்படி ஒடுங்கி இருக்க வேண்டும் என்று கூர்ந்து உணர்ந்து உணர்ந்து ஓங்காரத்தின் இயல்பை நன்றாய் அறிந்து கொள்ளலாம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

ஓங்காரம் :

“இருகரங்கள் ஓங்கி ஒன்றை ஒன்று தட்ட

எழுந்த சப்தம் இருந்த நிலையே ஓங்காரம்

வருமுன்னே இருந்த தெங்கே, அந்த நாதம்

வந்தபின்னே போனதெங்கே, வகையாராய

நிருவிகற்ப நிலையாக எதிலும், எங்கும்

நிறைந்து அணுக்கூட்ட இயக்கம் ஒக்க

பெருகிபல ஓசைகளாய் விரிந்தலைந்துப்

பரவெளியில் நிரவி நிற்கும் தன்மை கண்டோம்.”

பிரணவ விளக்கம் :


“ஓங்கார நிலையினிலே “மௌனம்” என்போம்

உச்சரிப்பில் அதனையே “சப்தம்” என்போம்

ஆங்காரமாய் விரிந்த அணுக்கள் கூடி

அடையும் பக்குவ இயக்கங்கள் ஒக்க

ரீங்காரம் பலவிதமாய் விரியக்கண்டோம்

இரகசியமாய் புல், பூண்டு, மரம், மண், கல்லும்,

ஊங்கார ஜபம் அல்லும் பகலும் செய்வது

உணர்ந்திட்டோம் “ஓம்” என்னும் பழக்கம் விட்டோம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூலை 18 : மனிதன்

PREV      : ஜூலை 16 : துரியாதீத தவம் – பலன்கள்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!