x

ஏப்ரல் 23 : த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம்

 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் :

“நீங்கள் வெளியூருக்கு செல்கிறீர்கள்; அங்கு பகல் உணவு கிடைக்காது என்பதால் ஒரு உணவுப் பெட்டியில் (Tiffen Box) உணவை எடுத்துச் செல்கிறீர்கள். இப்போது நீங்கள் வேறு உணவு வேறு. பிறகு பகல் ஒரு மணி அளவில் அந்த உணவை உண்ணுகிறீர்கள். இப்போது அந்த உணவு பெட்டியில் இல்லை உங்களுக்குள் சென்றுவிட்டது.

இவ்வளவு நேரம் அந்த உணவும் நீங்களும் தனித்தனியே இருந்தாலும் இப்போது ஒன்றாகி விட்டீர்கள். இப்போது உங்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் யார்? இதுவரையில் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள மொத்த உணவின் சாரம் (essence) தானே?

அணு நிலையில் உடலும் ஒன்றே. சிவம் என்ற இருப்பு நிலையிலிருந்து சக்தியெனும் விண் மலர்ந்தது. சில விண் துகள்கள் உடலாயின. சில விண் துகள்கள் உணவாயின. இதனால் உடலும் உணவும் தோன்றிய மூலப்பொருள் அணுவே. இங்கு அத்வைதம் துவைதமாயிற்று. 1 மணிக்கு நீங்கள் வேறு, அந்த உணவு வேறு. 5 மணிக்கு நீங்களும் அந்த உணவும் இரண்டறக் கலந்து ஒன்றாகி விட்டீர்கள். 1 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெற்ற வேலைக் கிரமம் (Process) இருக்கிறதே, அதுதான் விசிஷ்டாத்வைதம்.

மனிதன் அத்வைதம் என்பதையும், த்வைதம் என்பதையும் உணர்ந்து கொள்கிறான். த்வைதம் என்ற நிலையிலிருந்து, உண்மையைப் புரிந்து கொண்டு, இயற்கையின் ஒழுங்காற்றலைப் புரிந்து கொண்டு, தன்னை உயர்த்திக் கொண்டு அத்வைதம் என்ற நிலைக்கு சென்றடைகிறான். இந்த செயல் ஒழுங்கு (Process) தான் விசிஷ்டாத் வைதம். அதை தனித் தன்மையுள்ள அத்வைதம் (Special advaitha) என்பதும் பொருந்தும்.

இவ்வாறான உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளாமல், த்வைதம் ஒன்றுதான் கடவுளை அடையவழி என்றும், அத்வைதம் ஒன்றுதான் கடவுளை அடையவழி என்றும், சண்டையிட்டுக் கொண்டு மக்களில் பலர் தங்களைக் குழப்பத்திலாழ்த்திக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் மூன்று அடிப்படைக் கொள்கைகள் (Principles) உண்டு. “எல்லாம் ஒன்று” என்பது அத்வைதம். ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மைக்கும் குணாதிசயங்களுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று ‘மாறுபடுகிறது’ என்பது த்வைதம். எல்லாமே பகுத்துக் கொண்டே வரப்படும்பொழுது (While disintegrating) அணுவாகி பின்னர் பாரமாகிறது என்பது விசிஷ்டாத்வைதம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

 

அத்வைதம், துவைதம் :

“கற்கண்டு என்ற ஒரு வார்த்தை சொன்னால்

கரும்பு ரசப்பக்குவத்தின் சரித்திரமாகும்

கற்கண்டைக் கரும்பு ரசம் என்றால் அஃது

கருத்துக்கு அத்துவித தத்துவம்போல்

கற்கண்டு கரும்புரசம் வேறு வேராய்க்

காட்டுவது துவித நிலை விளக்கம் ஒக்கும்

கற்கண்டு கரும்புரசம் இரண்டும் போலாம்

கடவுளும் மற்றனைத்துருவும் கருத்துணர்ந்தால்”.

“வேதாந்தி சித்தாந்தியானாலன்றி


வீடுபேறு கிட்டாது வெற்றுப்பேச்சால்

வாதாடி வாழ்நாளைக் கழிப்ப தல்லால்

வந்துலகில் பிறந்த பயன் வழுக்கிப்போகும்”.

“வேதத்தை யான்படித்த தில்லை ஆனால்

வேதத்தின் உட்பொருளாய் என்னைக்கண்டேன்

வாதத்தில் யான் கலந்து கொண்டதில்லை

வாதிப்போர் அனைவருக்கும் பொருளாய் உள்ளேன்;

பேதித்த அண்டங்கள் உயிர்கட்கெல்லாம்

பிறப்பிடமாய்க் கருப்பொருளாய் என்னைக் கண்டேன்;

சோதிப்போர் புலனறிவால் என்னைக் காணார்

சுயநிலையை அகத்துணர அவர் நான் ஒன்றே”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : ஏப்ரல் 24 : தொண்டாற்ற முனைந்து நில்லுங்கள் 

PREV      :  ஏப்ரல் 22 : பற்றறிவு, கற்றறிவு,முற்றறிவு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!