வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
ஐவகைப் பற்று :
“இயற்கையின் ஓர் கூறு தான் மனிதன். ஆனாலும் பேரியக்க மண்டலத்தில் விளங்கும் எல்லாச் சிறப்புகளும் நுணுக்கமாக உள்ளடக்கம் பெற்ற திருவுருவமாக மனிதன் திகழ்கிறான். இயற்கையின் ஆதிநிலையாகிய மெய்ப்பொருள் மனிதனிடத்தில் தான் தன் பெருமதிப்பை உணர்ந்து நிறைவு கொள்ளும் அறிவாற்றலாக அமைந்திருக்கிறது. இவ்வறிவு ஐம்புலன்கள் மூலம் பொருள்கள், மக்கள், இன்ப துன்ப உணர்வுகள் இவை வரையில் எல்லை கட்டி குறுகி நின்று இயங்கும்போது மாயையாகவும், உணர்ச்சிவயமாகவும் சிறுமையடைகிறது. அவ்வறிவு, தனது இயக்கத்திற்கு உலக மக்கள் சமுதாயத்தின் எண்ண அலைகளும், பேரியக்க மண்டலத்தில் இயங்கும் எல்லாத் தோற்றங்களின் ஆற்றலும் அடிப்படையாக அமைந்து தான் அறிவின் முழுமை பெற்று உய்ய உதவியாக உள்ளன என்ற விளக்கத்தில் மெய்ஞ்ஞானமாகி, விரிவும் விழிப்பும் பெற்று நிறைவு பெறுகிறது.
எனவே எல்லையற்ற அருட்பேராற்றலின் ஒரு பகுதியே ஒவ்வொரு மனிதனும் என்ற உண்மையினை உணர்ந்து அதனை மறவாமல் இருக்கவும், பழகிக் கொள்ளவும் வேண்டும். அகன்ற பேராற்றலை மறவாத விழிப்போடு உலக வாழ்வை நடத்தும் போது தான், பற்றி நிற்பதிலும் பற்றின்மை என்ற தகைமை மனிதனுக்கு உண்டாகிறது.
உலக வாழ்வில் பொருள், மக்கள், பால், புகழ், செல்வாக்கு என்ற ஐவகைப் பற்று ஏற்படுவது இயல்பே. கடமையுணர்வோடும் அளவு முறை அறிந்தும், விழிப்போடு இப்பற்றுக்களை வளர்த்தும், காத்தும் கொள்ளவேண்டியது பிறவிப் பயனை எய்த அவசியமானவை. நீரில் குளிப்பது தேவைதான். ஆனால் நீரில் மூழ்கிவிடாமலும் காத்துக் கொள்ள வேண்டும் நெருப்பு வாழ்க்கைக்கு பலவகையிலும் தேவைதான். ஆனால் நெருப்பு எரித்துவிடாமலும் காத்துக் கொள்ள வேண்டும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * *
“பணத்தை படைத்தது மனிதனே. கொடுப்பது மட்டும் இறைவனோ?”
“ஆக்கத்துறையில் அறிவை செலுத்து.
ஊக்கமுடன் உழை. உயர்வு நிச்சயம்”.
“பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற கருத்தோடு
எழும் ஒரு ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும்”.
பணமும் பாசமும் :
“பணம்பாசம் இவ்விரண்டும் மனிதர் வாழ்வைப்
பாழாக்கும் நச்சாகும் ஆய்ந்து பாரீர்.
பணம் மட்டும் செயற்கையிலே வந்ததாகும்.
பாசமோ இயற்கையிலே விரிந்ததாகும்.
பணம் ஒழித்துப் பாசத்தை அன்பாய் மாற்றி
பற்றற்று வாழவழி வகுத்து விட்டேன்.
பணம் ஏனோ? பகுத்தறிவின் உயர்வில் வாழும்
பண்பை நம் பழக்கத்தால் பெற்றுவிட்டால்”.
தொடர்புணர்தல்:
“உடலுக்கும் பொருளுக்கும் தொடர்புணர்ந்து
உழைத்துண்டு உதவுதலே கர்ம யோகம்
உயிருக்கும் பரத்திற்கும் தொடர்புணர்ந்து
உயர் அறிவில் ஒழுகுவது ஞான யோகம்
உடலுக்கும் உயிருக்கும் தொடர்புணர்ந்து
உணர்சிகளை முறைப்படுத்தல் மருத்துவம் ஆம்.
உயிருக்கும் உயிர்கட்கும் தொடர்புணர்ந்து
ஒத்துதவி வாழும் முறை அரசியல் ஆம்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஜூலை 11 : பக்தி – ஞானம்
PREV : ஜூலை 09 : குடும்ப நல வாழ்த்து
